Saturday, 15 December 2012

கட்டிட பணியை தொடங்கும் பூஜை


கட்டிட பணியை தொடங்கும் பூஜை
படத்தில் காட்டியுள்ளபடி வட கிழக்கு பகுதியில் பள்ளம் எடுத்து வடக்கு பக்கமாகத் திரும்பி ஐந்து சுமங்கலிகள் ஐந்து தணீண்ர் குடத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக நின்று பள்ளத்தில் மஞ்சளும் குங்குமமும் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். வரை படத்தில் காட்டியபடி வாழை இலை, சுவாமிபடம் செங்கல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக கிழக்கு நோக்கி அமைத்துக்கொண்டு வாழையிலையில் தண்ணீர் தெளித்து பின்பு அவல் பொரி கடலை, கடலை,  அரைகிலோ நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை கலந்து வாழையிலையில் வைக்க வேண்டும். பின்பு சுவாமிபடத்திற்கு குடும்பத்தலைவி நெய் அல்லது நல்லெணெய் விளக்கை ஏற்ற வேண்டும். மனை உரிமையாளரின் தாய், மனைவி, மாமியார் ஆகிய மூன்று
பேரில் ஒருவர் விளக்கை ஏற்ற வேண்டும். சுவாமி படத்தின் முன் வாழை இலையில் நாம் விருப்படும் 3 வகை கனிகள் வைத்து இரண்டு தேங்காய் உடைத்துத் தண்ணீர் சிதறாமல் வைக்கவும். அப்படியே தண்ணீர் சிதறி விட்டால் உடைத்ததேங்காய் உள் பகுதியில் நல்ல தணீரை ஊற்றி வைக்க வேண்டும். பின் கற்பூரம் ஏற்றி உதிரி பூக்களைக் கொண்டு 108 முறை வாஸ்து காயத்திரி மந்திரம், வாஸ்து அஷ்டோத்திரம் கூறி ஒவ்வொரு முறைம் வாஸ்து பகவான் பாதத்தில் மலர் தூவ வேண்டும். பூஜை செய்யும் பள்ளத்தில் உதிரி பூக்கள்,  மஞ்சம் , குங்குமம் இடவேண்டும். பிறகு மூத்தவர்கள் முதலிலும் இளையவர்கள் இரண்டாவதும் தீபாரதனைச் செய்ய வேண்டும். பிறகு காலி மனையில் முதலில் நான்கு எலுமிச்சம் பழம், கற்பூரம், எடுத்துக் கொண்டு தென் மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய நான்கு பகுதிகளில் எலுமிச்சம் பழத்தின் மீது கற்பூரம் வைத்து ஜூவாலைடன் தீபாரதணைக் காட்டி அதே இடத்தில் கற்பூரத்தை போட்டு எலுமிச்சம் பழத்தை இரண்டாக பிழிந்து தரையில் போட வேண்டும். அதன் பின் தாம்பூலத் தட்டில் பூஜை செய்த பிரசாதத்தை வைத்து அஷ்டதிக்கு பாலகர்களை மனதில் நினைத்து மனையில் குறியிட்ட எட்டுத் திசைகளிலும் குங்குமம், மஞ்சம், பூ ஆகியவற்றை பூமியில் இடவேண்டும். பிறகு பிரசாதத்தைம் பூமியில் இட வேண்டும். அதன் பிறகு மனையின் மத்திய பகுதியில் குங்குமம், மஞ்சம்பூ ஆகியவற்றைஇட வேண்டும். அதன்பின் கட்டிட நிபுணர் 9 சுமங்கலிகள்கையால் பூஜை செய்த செங்கற்களை வாங்கி பூஜை செய்ய எடுத்த பள்ளத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி முறையாக அடுக்கி வைக்க வேண்டும். பிறகு நவதானியங்களை போட்டு கற்பூரதீபம் காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்பு பூஜைக்கு வந்த அனைவரும் கிழக்குமுகமாக நின்று உதவியாளர் ஒருவரை அழைத்து எலுமிச்சம் பழம்,தேங்காய், பூசணிக்காய் ஆகிய மூன்றிலும் கற்பூரம் வைத்து ஒன்றன் பின் ஒன்றாக முறையாக திருஷ்டி சுற்றி மனையின் முன் தெருவில் போட்டு உடைக்க வேண்டும்.
பூஜை செய்த செங்கற்களை கட்டிடம் அமைக்கும் போது தென்மேற்கு அல்லது வடகிழக்கு பாகத்தில் வைத்து கட்ட வேண்டும். வாஸ்து விழிக்கும் நேரத்தை 5 பாகமாக பிரித்து நான்குபாக நேரத்தில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு 5வது பாக நேரத்தில் பூஜை செய்து முடிக்க வேண்டும். இது போன்று முறையாக வாஸ்து பூஜை செய்து கட்டிபணியைத்தொடங்கும்போது வீடு கட்டும் பணி தடையின்றி நடந்தேறும்.
வீட்டில் உள்ளவர்கள் வாழ்வு சிறக்கும். அஷ்ட திக்கு பாலகர்கள் வீடு கட்டுவதற்கு உதவியாகயிருபார்கள். சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில்உள்ளவர்களுக்குக் கிடைக்கும்.
வாஸ்து பகவான் காயத்திரி மந்திரம்
ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்
அஷ்டதிக்கு பாலகர் துதி
அஷ்டதிக்கு பாலகர் ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அரும்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத்ï போற்றி
சுப அக்னி பகவேனே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி!
ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் அமையும் அறைகளின் சிறப்பையும்,  அதைக்கையாள வேண்டிய முறையையுன் விபரம்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்

தனுசு ராசியின் சின்னமே போர்க் கருவியான வில்லைக் குறிப்பதால், எதையுமே போராடிப் பெறுவதில் தனி சுகம் காண்பீர்கள். சவாலான விஷயங்களை நோக்கித்தான் உங்கள் இலக்குகளே இருக்கும். ‘‘போனா அந்த மாதிரி வேலைக்குத்தான் போவேன். இல்லைன்னா வீட்லயே இருக்கேன்’’ என்றெல்லாம் வெகுநாட்கள் வேலையில்லாமல் காத்திருந்து பிறகு ஜெயிப்போரும் உண்டு. அதனாலேயே தனுசுக்கு அதிபதியான குருவை ‘போராட்ட குரு’ என்று தனித்துச் சொல்வார்கள். சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்ட ஏகலைவனைப் போல பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் விளங்குவீர்கள். 

தொழிலாளிகளை நண்பரைப் போல நடத்துவீர்கள். சட்ட திட்டங்கள், மிரட்டல், ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சாமல், அன்புக்குக் கட்டுப்பட்டு ஒரே நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை பார்க்கும் ஊழியர்கள் உங்கள் ராசியில்தான் அதிகம். உங்களின் ராசிச் சின்னமான வில் அவ்வளவு சீக்கிரம் வளையாது. அதுபோல வேலை பார்க்கும் இடத்திலும் வளைந்து கொடுத்துச் செல்ல மாட்டீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காக்கா பிடிக்கும் வேலையெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. நேர்மையோடு இருப்பீர்கள்; மற்றவர்களிடமும் அந்த நேர்மையை எதிர்பார்ப்பீர்கள். 

உங்கள் ராசிநாதனான குரு ஒரு தன்மான கிரகமாக இருப்பதால், அலுவலகத்தில் நிகழும் சின்னச் சின்ன அவமானங்களைக்கூட தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக வரும் புதனே உத்யோக ஸ்தானத்திற்கும் வருவதால், வேலையில் எப்போதுமே திரிசங்கு சொர்க்க நிலை நீடிக்கும். வீடோ, அலுவலகமோ... இரண்டில் ஒன்று நன்றாக இருந்தால் மற்றதில் பிரச்னை இருக்கும். பிரமோஷன் வந்த மகிழ்ச்சியைக்கூட வீட்டில் கொண்டாட முடியாமல் தர்மசங்கடத்தில் இருப்பீர்கள். அதேபோல குரு முன்னெச்சரிக்கை கிரகமாக வருவதால், நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை இன்றே தீர்மானித்து விடுவீர்கள். சில சமயம் நாளைக்குண்டான வேலையை வீட்டிற்கே எடுத்துச் சென்றும் செய்வீர்கள். உங்கள் ராசிநாதனான குருவும், பத்துக்குரியவனான புதனும் பகையாளிகளாக இருப்பதால் உத்யோகத்தில் விருப்பம் இல்லாமலேயே இருப்பீர்கள். படிப்பது ஒன்றாகவும், பார்க்கும் வேலை வேறொன்றாகவும் இருக்கும். அந்த அளவுக்கு ஆரம்பகால உத்யோகங்களில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். ‘‘எங்கயோ இருக்க வேண்டிய நான், கடைசியில இங்க இருக்க வேண்டியதாப் போச்சு’’ என்றும் புலம்ப வேண்டியிருக்கும். 

அலுவலகத்தில் வெகுநாட்கள் உங்களை டார்ச்சர் செய்பவர்களை ஓரங்கட்டுவீர்கள். அதேபோல ஒரு பதவியைக் குறிவைத்து விட்டால், அது கிடைக்கும்வரை ஓயாமல் போராடுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் போராட்டத்தையும், வைராக்கியத்தையும் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். பொதுவாகவே, பத்தாமிடத்திற்கு அதிபதியாக புதன் வருவதால், எந்த அலுவலகத்திலும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமர்வீர்கள். அதேபோல கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வீர்கள். வெளிநாட்டு நிதியை வைத்துக் கொண்டு முதியோர் இல்லம் அமைப்பீர்கள்; நிதி நிறுவனங்களை ஏற்று நடத்துவீர்கள். பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். இதெல்லாம் பொதுவான சில பலன்களாகும். இப்போது நட்சத்திர ரீதியாக காண்போமா?

மூலம் நட்சத்திரம்தான் தனுசு ராசியிலேயே மிகவும் சென்ஸிடிவ்வானது. பொறுப்பாக இருக்கும் நீங்கள், சுய கௌரவமும் அதிகம் பார்ப்பீர்கள். அநாவசியமாக விடுமுறை எடுக்க மாட்டீர்கள். அலுவலக வேலை பாதிக்காத அளவுக்கு சொந்த வேலையை அமைத்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் தவறு என்றால் பொங்கி எழுவது, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் வெளியேற்றுவது என்று உடனடியாக நடவடிக்கையில் இறங்கி விடுவீர்கள். எத்தனை கெஞ்சினாலும் விடவே மாட்டீர்கள். ‘‘ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்’’ என்று ஒரே வார்த்தையில் அடக்கி விடுவீர்கள். 

மூலம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ராணுவம், காவல்துறையில் குற்றத் தடயவியல் நிபுணர், யுனானி, சித்த வைத்தியம், நியூரோ சர்ஜன், விவசாயத்துறை அதிகாரி, எலக்ட்ரீஷியன் என்று பணிபுரியும்போது முன்னேற்றம் எளிதாக இருக்கும். வியாபாரமெனில் உரக்கடை, பூச்சி மருந்து, பெட்ரோல், டீசல், அரிசி மண்டி, பருப்பு மண்டி, மெடிக்கல் ஷாப், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஈடுபடுவது சிறந்தது. இரண்டாம் பாதத்தினர் கலைத் துறையில் சினிமா டைரக்டர், பொதுப்பணித் துறையில் எஞ்சினியர், வருவாய்த்துறை அதிகாரி, கதர் கைத்தறித் துறை, வன விலங்குகள் சரணாலயம், அரசு விதைநெல் ஆராய்ச்சி என்று அரசு சார்ந்த துறையில் வேலைக்கு முயற்சித்தால் நல்லது. வியாபாரமெனில் கட்டுமானத்துறை, டெய்லரிங், அட்வர்டைசிங் ஏஜென்சி, போட்டோ ஸ்டுடியோ, இரு சக்கர வாகனம் விற்பனை மற்றும் சர்வீஸ், கேளிக்கை கூடங்கள் லாபம் தரும். மூன்றாம் பாதத்தினர் அரசு அச்சகம், அரசு நூலகம், தொல்லியல் துறை, வணிகவியல், பொருளாதாரவியல், புள்ளியியல் துறையில் ஆசிரியர் மற்றும் பேராசிரியர், பத்திரிகை நிருபர், ஷேர் மார்க்கெட் அலுவலகத்தில் பணி, மொழிபெயர்ப்பாளர், சினிமாவில் மேக்கப் மேன் என்று சில வேலைகளில் அமர்வீர்கள். வியாபாரமெனில் கமிஷன், புரோக்கரேஜ், பேன்சி ஸ்டோர், வாஸ்து மீன் - வளர்ப்பு மீன் விற்பனைக் கூடம், கூரியர், புரோகிதம், ஜோதிடம், பூஜை சாமான்கள், மத சம்பந்தப்பட்ட நூல்கள் விற்பனை என்று ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். நான்காம் பாதத்தினர் முகச் சீரமைப்பு மருத்துவர், நீர்ப்பாசனத்துறை அதிகாரி, அணை பராமரிப்புத்துறை, தமிழ் ஆசிரியர், மனநல ஆலோசகர், குழந்தை நல சிறப்பு மருத்துவர் போன்ற சில பணிகளில் ஈடுபட்டு சம்பாதிப்பீர்கள். பால் பண்ணை, ஹோட்டல், குழந்தைகளுக்கான ரெடிமேட் துணிக்கடை, போட்டோ லேமினேஷன், ஆப்டிகல்ஸ், ஷிப்பிங் கிளியரன்ஸ் ஏஜென்ட் என்ற தொழில்கள் வெற்றி தரும்.

பூராடத்தில் பிறந்த நீங்கள் எப்போதுமே அலுவலகத்தை ஜாலியாக வைத்திருக்க விரும்புவீர்கள். ‘‘வாழ்க்கையில பாதி நாட்கள் அங்கதான் இருக்கோம். அதனால வேலையோட மகிழ்ச்சியும் முக்கியம்’’ என்பீர்கள். இனிப்பு முலாம் பூசிய கசப்பு மருந்தைத் தருவதிலும் வல்லவர்கள். இதனாலேயே அலுவலகத்தில் எதிரிகள் உங்களுக்குக் குறைவு. அதேசமயம் பூராடம் போராடும் என்பதையும் மறக்கக் கூடாது. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பதால், அலுவலகத்தில் உங்களுடைய மேஜை, நாற்காலி முதல் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பீர்கள். நீங்கள் என்ன உடை அணிந்து வருகிறீர்கள் என்று பார்ப்பதற்கே நாலு பேர் இருப்பார்கள். எல்லாமே எளிதாக கிடைத்து விடும் என்ற சிந்தனை எப்போதுமே மேலோங்கியிருக்கும். ‘கிணத்துத் தண்ணிய வெள்ளம் கொண்டு போயிடாது’ என்று அலட்சியமாகவும் இருப்பீர்கள். இதுபோன்ற சில பலவீனங்களைத் தவிர்த்தால், எளிதாக முன்னேறுவீர்கள். 

பூராடத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கியில் உயர் பதவி, கல்வித் துறை அதிகாரி, சட்டமன்றம், தலைமைச் செயலகத்தில் உயர்பணி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், வியாபாரம் எனில் பெயின்ட், சிமென்ட், மெடிக்கல் ஷாப், சாலை மேம்பாலக் கட்டுமானப் பணி, நகைக்கடை அதிபர், சூரியசக்தி மின்சாரம் தயாரித்தல் என்று சிலவற்றில் இறங்கி சாதிப்பார்கள். இரண்டாம் பாதத்தினர் தொலைக்காட்சி; பத்திரிகை நிருபர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், உடற்கல்வி ஆசிரியர், கால்நடை மருத்துவர் என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் எனில், புத்தக வெளியீட்டாளர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடம், ஜிம் வைத்து நடத்துதல், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் கடை, காய்கனி அங்காடி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை என்று லாபம் காண்பீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை, டெர்மடாலஜிஸ்ட், காஸ்மெடாலஜிஸ்ட் என்று அழகுபடுத்தும் பணிகளில் அமர்வீர்கள். மதுபானத் தொழிற்சாலை, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன ஷோரூம், ஹோட்டல், மாடுலர் கிச்சன், இன்டீரியர் டெகரேட்டர், சினிமாவில் கலை இயக்குனர், திருமண ஏற்பாட்டாளர், பட்டுப் புடவை விற்பனை என்று முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்றதாகவும் அமையும். நான்காம் பாதத்தினரில் விமானப் படை, அணுமின் நிலையம், கோள் ஆராய்ச்சி மையம், எலக்ட்ரிகல் எஞ்சினியர், பைலட், புற்றுநோய், கர்ப்பப்பை மருத்துவர் என்று சில வேலைகளில் அமருவீர்கள். வியாபாரம் எனில் செங்கல், கிரானைட் வியாபாரம், பைனான்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், அசைவ உணவு ஹோட்டல், இறால் பண்ணை, ஆட்டிறைச்சிக் கூடம், கோழிப் பண்ணை, மசாலா சாமான்கள், தோல் வியாபாரம், காலணி கடை என்று லாபத்தை அடையலாம். இல்லையெனில் உத்யோகத்தில் திடத் தன்மை இல்லாமல் வேலையை விட்டுவிட்டு அடிக்கடி அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

உத்திராடம் முதல் பாதத்தினர், அலுவலகத்தில் எதற்குமே எடுத்த உடனே தங்களின் கோபத்தையோ அல்லது சந்தோஷத்தையோ வெளிப்படுத்த மாட்டீர்கள். பொறுமையாக இருப்பது வரை இருப்பீர்கள். பிறகு அமைதியாக சம்பந்தப்பட்டவரின் தொடர்பைத் துண்டித்து விடுவீர்கள். அலுவலகத்தில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதிலிருந்து தொடங்கி, அலுவலகரீதியான அனைத்திலுமே நேர்த்தியை எதிர்பார்ப்பீர்கள். எப்பொழுது பேசினாலும் ‘‘நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும்போது...’’ என்றுதான் தொடங்கிப் பேசுவீர்கள். சூரியனும் குருவும் சேர்க்கையில் இருக்கும்போது, நேர்மைக்கும், எதையும் அனுசரிச்சுப் போயிடலாம் என்கிற குணத்துக்கும் மனப்போராட்டம் 

இருந்தபடி இருக்கும். முடிவெடுப்பவராகவும். ஆலோசனை சொல்பவராகவும் நீங்களே இருக்க வேண்டுமென நினைப்பீர்கள். 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி, ஆடிட்டர், வேதியியல் ஆசிரியர், வங்கி, தங்க நகைகள் தயாரிக்குமிடம், ரெசிடென்ஷியல் ஸ்கூல், அரசாங்க ஆவணக் காப்பகம், கருவூலம், உளவியல் பேராசிரியர், ட்ரில் மாஸ்டர், மயக்க மருந்து கொடுப்பவர், சர்க்கஸ், வனத்துறை, இதய நோய் மருத்துவர் என்று குறிப்பிட்ட சில துறைகளில் பணிபுரிவீர்கள். வியாபாரம் எனில், வறுகடலை நிலையம், நெய், அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் மற்றும் தேக்கு மரங்களை விற்பனை செய்வது என்று வியாபாரங்களை விஸ்தரித்து பெரியளவில் முன்னேறுவீர்கள்.    

தனுசு ராசியில் பிறந்த உங்களின் வேலை ஸ்தானத்தை பத்தாம் வீட்டிற்கு அதிபதியான கன்னி புதன்தான் நிர்ணயிக்கிறார். எனவே, பொதுவாகவே பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளையும், தாயார் மகாலட்சுமியையும் வணங்குங்கள். மூலவர் பக்தவத்சலன் நெடிதுயர்ந்து நிற்கிறார். இத்தல தாயாரை எல்லோரும் ‘என்னைப் பெற்ற தாயே’ எனும் பாவனையில் வணங்குவார்கள். இந்த பக்தவத்சலன் பத்தராவி பெருமாள் (பக்தர்களின் ஆவிக்குரியவன்) என்றும் போற்றப்படுகிறார். இத்தலம் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 

(தீர்வுகளைத் தேடுவோம்...)

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்

உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்த நீங்கள், விழுந்தாலும் வேகமாக எழுந்து விடுவீர்கள். வைராக்கியம் மிக்கவர்களாக விளங்குவீர்கள். எப்போதுமே பெரிய இலக்கை வைத்துக் கொண்டு ஓடியபடி இருப்பீர்கள். பணி செய்யும் இடத்தை வழிபாட்டுத் தலமாக மதிப்பீர்கள். மரியாதை கொஞ்சம் குறைந்தாலும் வேலையைத் துறப்பீர்கள். யாராவது ஏதாவது சொன்னால் அதையே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் கனவுகளில் கூட அது எதிரொலிக்கும். அந்த அளவுக்கு ஆழமாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதுமே அரசாங்கத்தைவிட தனியார் வேலைதான் சரியாக வரும். வேலைக்குச் செல்வதை விட சொந்தத் தொழில் செய்வதைத்தான் மிகவும் விரும்புவீர்கள். சமயப் பிரசாரகர், நர்ஸ், அஞ்சல் துறை, வானொலி - தொலைக்காட்சி நிலையம், சினிமாவில் படைப்புத்துறை, அட்வகேட், கெமிக்கல் எஞ்சினியர், இதய அறுவை சிகிச்சை நிபுணர், புற்றுநோய் நிபுணர், அணுமின் நிலையம் என்று பணியாற்றுவீர்கள். பில்டிங் கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், ஆர்க்கிடெக்ட், காய்கறிக்கடை, கார் சர்வீஸ் சென்டர், தெய்வீகப் பொருட்கள் மற்றும் நூல்கள் விற்பனை, தெய்வச் சிலைகள் செய்தல், சில கலைத்துறை தொடர்பான வியாபாரங்களை மேற்கொள்வீர்கள். 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் நாசூக்காக வேலை பார்ப்பீர்கள். பத்திரிகையாளர், விமர்சகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வானொலி-தொலைக்காட்சி நிலையம், பங்குச் சந்தை அலுவலகம், தபால் துறை, மக்கள் தொடர்பு அதிகாரி, உளவியல் நிபுணர் என்று வேலை அமையும். வியாபாரமெனில் பதிப்பகம், நூலகம், ஏ.சி, சர்வீஸ், எலெட்ரானிக்ஸ் கடை, இசை, ஓவியம், நடனம், யோகா பயிற்சிக்கூடங்கள் என்று சில குறிப்பிட்ட துறைகளில் முத்திரை பதித்து சாதிப்பீர்கள். 

மூன்றாம் பாதத்தில் பிறந்த நீங்கள் சினிமாவில் டைரக்ஷன், எடிட்டிங், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சவுண்ட் எஞ்சினியர், சாப்ட்வேர் அலுவலத்தில் டீம் லீடர், இரும்பு உருக்காலை, சிமென்ட் தொழிற்சாலை என்று வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில் பியூட்டி பார்லர், தியேட்டர், கல்யாண மண்டபம் நடத்துதல், கேட்டரிங் கான்ட்ராக்டர், பூக்கடை, டிராவல்ஸ், டூரிஸ்ட் கைடு, போர்டிங் லாட்ஜிங் என்று சிறந்து விளங்குவீர்கள். 

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் சித்த மருத்துவம், ரயில்வே, காவல்துறை, வருவாய்த் துறை, நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், மதுபானத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்க் என்று பல இடங்களில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில் செங்கல் சூளை, கட்டிடம் கட்டுவதற்கான உபகரணங்கள் விற்பனை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், ஸ்கேன் சென்டர், ரத்தப் பரிசோதனை நிலையம் என்று சிலவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கலகலப்பாகப் பேசு பவர்களாக இருப்பீர்கள். பேசுவதை வைத்து உங்களை புத்திசாலி என்று முடிவெடுக்கலாமே தவிர, எழுதச் சொன்னால் திணறுவீர்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருப்பீர்கள். அதாவது, பல வேலைகளை பார்த்துத்தான் ஒரு வேலையில் திடமாக அமர்வீர்கள். பத்தோடு பதினொன்றாக எதிலேயும் இருக்கப் பிடிக்காது. ‘‘உன்னை நம்பித்தான் கம்பெனியே இருக்கு’’ என்று சொல்லிச் சொல்லியே உங்களிடம் வேலை வாங்குவார்கள். இப்படி உழைத்துக் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது நொந்து கொள்வீர்கள்.

ரேவதி முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் மேடைப் பேச்சாளர், சட்ட வல்லுனர், ஆசிரியர், கிரிக்கெட் கோச், தாவரவியல் ஆராய்ச்சியாளர், காசநோய் மருத்துவர், வீணை வித்வான், தவில் வாசிப்பவர், வங்கித் துறை, சர்வேயர், வனத்துறை, வன விலங்கு காப்பகம், ராணுவம், சிபிஐ என்று சில துறைகளில் வேலை பார்ப்பீர்கள். அதுவே சொந்தத் தொழில் அல்லது வியாபாரமெனில் பள்ளி, கல்லூரி வைத்து நடத்துதல், கம்ப்யூட்டர் அகாடமி, இன்சூரன்ஸ், மெடிக்கல் ஷாப், டிடெக்டிவ் ஏஜென்சி, மணமக்கள் தகவல் மையம் என்று தொடங்கி நல்ல முன்னேற்றங்கள் காண்பீர்கள். 

இரண்டாம் பாதத்தில் பிறந்த நீங்கள் கண்ணாடித் தொழிற்சாலை, ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், சினிமா எடிட்டிங், ரேஷன் கடை, பால் பண்ணை, வங்கி மேனேஜர், பத்திரிகை அலுவலகங்களில் பிழை திருத்துனர் என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். அதுவே வியாபாரமெனில், ஜிம், ரெஸ்டாரென்ட், வட்டிக்கடை, மசாலா சாமான்கள் தயாரித்தல், அரிசி மண்டி, எண்ணெய்க் கடை, தேங்காய் வியாபாரம், போட்டோ ஸ்டூடியோ, எக்ஸ்ரே-ஸ்கேன் சென்டர், குளிர்பானக் கடை, இனிப்பகம் என்று பல்வேறு விதங்களில் சம்பாதிப்பீர்கள். 

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாசனைத் திரவிய நிறுவனம், நிலக்கரிச் சுரங்கம், பொழுது போக்குப் பூங்கா, பத்திரிகை அலுவலகம், வனத்துறை, அஞ்சல்துறை, தனியார் கூரியர், காகித ஆலை, பெட்ரோல் பங்க், இரும்பு உருக்காலை, கோழிப் பண்ணை, கல்லூரி விரிவுரையாளர் என்று வேலைகளில் அமர்வீர்கள். அதுவே வியாபாரமெனில் விறகுக் கடை, மருத்துவமனை உபகரணங்கள் தயாரிப்பு, கார் வாங்கி விற்றல், இரு சக்கர வாகனம் சர்வீஸ் சென்டர், லாட்ஜ், ஹோட்டல், பைனான்ஸ், பீங்கான் பொருட்கள் தயாரித்தல், மசாலா தூள், நகைக் கடை வைத்தல் என்று குறிப்பிட்ட துறைகளில் நல்ல நிலைக்கு வந்து விடலாம். 

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பட்ஜெட் குழுவில் அங்கம் வகித்தல், அரசு ஆணைகள் அச்சடிக்கும் இடம், நாசிக் போன்ற பணம் அச்சடிக்கும் இடங்களில் வேலை, இமிகிரேஷன், பாஸ்போர்ட் அலுவலகம், வருமான வரி, சுங்க வரி, மின்வாரி யம், போக்குவரத்து அலுவலகம், சினிமாவில் கதை-வசனம் எழுதுதல், பத்திர எழுத்தாளர், வேத பாடசாலை, கோயில் அதிகாரி, ஓதுவார், நடிகர், வசனகர்த்தா, நகைச்சுவை பேச்சாளர், மிமிக்ரி செய்தல் என்று பல விதத்திலும் திறமையோடு இருப்பீர்கள். வியாபாரமெனில் அயல்நாட்டுப் பணிக்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் ஏஜென்ட், தங்க நகை வேலை செய்தல், வறுகடலை நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் என்று பல்வேறு துறைகளில் சம்பாதிப்பீர்கள்.
மீன ராசியில் பிறந்த உங்களின் வேலை ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். எனவே ஆயுதம் ஏந்திய பெருமாளை வணங்குவது நல்லது. சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாரை வணங்குவது மிகுந்த நலம் பயக்கும். திருமாலின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையும், ஆதியந்தம் இல்லாததும் பெருமாளை விட்டுப் பிரியாததும் சுதர்சனமே ஆகும். முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி தரும் இந்த திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.  

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் எனும் திவ்யதேசத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை தரிசித்தால், உங்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய குழப்பங்கள் எளிதாகத் தீரும். இத்தலம் மதுரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. (தீர்வுகளைத் தேடுவோம்...)

சிம்ம ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

சிம்ம ராசியில் பிறந்த நீங்கள், குகையில் அமர்ந்து குரல் கொடுக்கும் சிங்கம்போல சுற்றியிருப்பவர்களை விரட்டிக் கொண்டிருப்பீர்கள். அதிகாரத்திற்கும், ஆளுமைக்கும் உரியவரான சூரியனின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அதனாலேயே எல்லோர்மீதும் ஆளுமை செலுத்த விரும்புவீர்கள். உங்களால் அடக்கப்படுபவர்களே பிறகு எதிரியாவார்கள். நீங்கள் தட்டிக் கேட்பவரே உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். ‘‘சொல்றவங்க ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் கேட்கணும்ங்கற அவசியம் இல்லை’’ என்றுதான் பெரும்பாலும் உங்கள் பேச்சு இருக்கும். இப்படி எல்லோரிடமும் பேசும்போது தானாக எதிரிகள் உருவாகி விடுவார்கள். ஆனால், உங்களோடு நேரடியாக மோதுபவரை விட மறைமுகமாகத் தாக்குபவர்களே அதிகம். நீங்கள் யார் மீதாவது கோபப்படுகிறீர்கள் என்றால், அதிகமாக அவரை நேசிக்கிறீர்கள் என்று பொருள். கீழே விழுந்தும் மண் ஒட்டாத கதையாக, சுய கௌரவத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.

உங்களின் ராசிக்கு சத்ரு, நோய், கடன் போன்ற இடங்களுக்கு அதிபதியாக மகரச் சனி வருகிறார். உங்களுக்கு ஜென்மப் பகையே சனிதான். அவரே சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வருகிறார். அதனால் எங்கு போனாலும், எதைத் தொடங்கினாலும், சனி தொந்தரவுகளை கொடுத்த வண்ணம் இருப்பார். ஒரு விஷயத்தை தொடங்கும்போதே முதலில் எதிர்ப்புதான் வரும். சிறிய வயதிலிருந்தே உறவினர்கள், அக்கம்பக்க வீட்டிலுள்ளோர் உங்களுக்கு ஏதாவது சொன்ன வண்ணம் இருப்பார்கள். வீட்டுக்கு வந்து போவோர் எல்லாம் உங்களுக்கு அறிவுரை மழை பொழிவார்கள். ‘‘நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமான்னு இருக்கேன்’’ என்றால் அதற்கு முட்டுக்கட்டை போட பலர் வருவார்கள். அவர்களை அப்படியே தள்ளி வைப்பீர்கள்.

அதேபோல, உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே, ஏழாம் இடமான வாழ்க்கைத்துணை ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் உங்களின் வாழ்க்கைத்துணை திறமையுள்ளவராக இருப்பார். உங்களை மீறி சிந்திப்பவராகவும் இருப்பார். குறைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டித் திருத்துவார். ஆனால் இந்த சனி சத்ரு ஸ்தானாதிபதியாக வருவதால், மனைவியையே நீங்கள் பல சமயங்களில் எதிரியாக நினைப்பீர்கள். நீங்கள் செய்யும் சில காரியங்களுக்கு துணைபோனால் நல்ல வாழ்க்கைத்துணை என்றும், அதைத் தவறு என்றால் ஜென்ம எதிரியாகவும் பார்ப்பீர்கள். ‘‘நான் எது சொன்னாலும் அதுல ஒரு குறை கண்டுபிடிக்கறதையே வேலையா வச்சுருக்கா’’ என்று மனைவியைக் கடிந்து கொள்வீர்கள். பொதுவாகவே நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் அந்நிய உறவுகள், புது உறவுகளில்தான் உங்களின் வாழ்க்கைத்துணை அமையும். நீங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தில் வசதியற்றோ, அல்லது ஏதேனும் குறைபாடுள்ள வீட்டிலிருந்தோ திருமணம் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

வாழ்க்கைத்துணையின் சொந்தங்களாலேயே உங்களுக்கு நிறைய கடன்கள் வரும். திருமண விழாக்களோ, அவசரச் செலவுகளோ, அறுவை சிகிச்சைகளோ... கடன்களை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அடைப்பது என்று பலவிதங்களில் கடன்கள் பெருகும். வாழ்க்கைத்துணை உங்கள் கருத்தோடு மாறுபட்டால், ‘நின்னா குத்தம்... நடந்தா குத்தம்...’ என்று எல்லா நடவடிக்கைகளிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பீர்கள். புகழ்ச்சிதான் உங்களின் முதல் சத்ரு. உங்களை மிகைப்படுத்திப் பேசுபவர்தான் எதிரியாக உருவெடுக்கிறார். அதை வாழ்க்கைத்துணைதான் முதலில் சுட்டிக் காட்டுவார். வாழ்க்கைத்துணை ஸ்தானமான ஏழாம் இடம்தான் தொழிலில் பங்குதாரர்களைப் பற்றிப் பேசும் இடமாகவும் வருகிறது. எனவே, பங்குதாரர்களால் பண இழப்பு மற்றும் வழக்குகளை சந்திப்பீர்கள். உங்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. ‘‘யார்கிட்டேயும் எதையும் சொல்ல மாட்டேன்’’ என்று தொடங்கி, சற்றுமுன் வரை நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி விடுவீர்கள்.

பெருமாள் பெயருள்ளவர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருந்துவிட்டு, பிறகு உபத்திரவம் செய்யத் தொடங்குவார்கள். முக்கியமாக ராமச்சந்திரன் என்பதுபோல சந்திரனோடு சேர்ந்து வரும் பெருமாள் பெயர் உள்ளவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். உங்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். லேபர் கோர்ட் படியேறுவதைத் தவிர்க்க முடியாது. மேலதிகாரி ஒத்துழைத்தாலும் கீழ்நிலை ஊழியர்களால் அவஸ்தைப்படுவீர்கள். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தாலும், 3, 11ம் இடத்தில் சனி இருந்தாலும், பிரச்னைகள் அதிகம் வராது. அப்போது மனைவியால் செல்வாக்கு பெறுவீர்கள். வேலையாட்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

சனி இப்படி ஆறாம் இடத்திற்கு உரியவராக வருவதால், எதிலுமே அவசர முடிவுகளை எடுக்க வைப்பார். எதையுமே எமோஷனலாக பேசவைத்துக் கொண்டே இருப்பார். இயல்பான நிதானத்தைத் தாண்டி, பதற்றத்தைக் கூட்டுவார். சொந்த ஜாதகத்தில் சனி உங்களுக்கு சரியில்லையெனில் உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் நீதிமன்றம் நாடுவீர்கள். அரை மணி நேரத்தில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்கு ஆறு வருடங்களாக அலைய வேண்டி வரும். சூரியன் உங்களின் ராசிக்கு அதிபதியாக இருப்பதால் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கு எதிராக மாறுவார்கள். வழக்கு போன்ற விஷயங்களில் அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும். 

நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைத்து விடுவார். தலைவலி, கண் நோய், முழங்கால் வலி போன்றவை ஏற்படும்போது சட்டென்று மருத்துவரை நாட வேண்டும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்போதும், உடனடி சிகிச்சை அவசியம். செலவு செய்வதற்கு உங்களைப் போல் ஒருவர் பிறந்து வரவேண்டும். அலுவலகத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து பேருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து விடுவீர்கள். கடன் வாங்கியாவது அடுத்தவர்களுக்காக செலவு செய்வீர்கள். நாலு பேர் போக வேண்டிய விசேஷத்திற்கு, இருபது பேரை சேர்த்துக் கொண்டு வேன், கார் என்று அலம்பல் செய்வீர்கள். அதேசமயம், பிடிக்கவில்லை எனில் சட்டென்று உறவினர்களையும் நண்பர்களையும் தூக்கிப் போடுவீர்கள்.

அடுத்தவர்களுக்கு பாவம் பார்த்தே பாதி சொத்தை அழித்த சிம்ம ராசிக்காரர்கள் உண்டு. மூன்று மாதத்திற்கு ஒரு மொபைல் தொலைக்கும் சிம்ம ராசியினரை நான் அறிவேன். அடிக்கடி ஏதாவது காரணத்துக்காக அபராதம் கட்டுவீர்கள். உங்களுக்கு கடன் எனில், அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள் மீது விழும். பரம்பரை சொத்து இருந்தால், அதை ஒழுங்காகப் பிரித்துக் கொண்டு விடுதல் நல்லது. இல்லையெனில் உடன்பிறந்தோர்களே வழக்கு தொடுக்கும் அபாயம் உண்டு. சிலசமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பீர்கள். ‘‘நான் சொன்னா அவரு எவ்ளோ வேணாலும் கொடுப்பாரு’’ என்று வாங்கிக் கொடுத்து விட்டு முழி பிதுங்குவீர்கள்.

சிம்ம ராசிக்காரர்களிடம் பிடிவாதம் இருக்குமளவிற்கு அவசரத்தனமும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீங்கள் குறும்புக்காரக் குழந்தைதான். இதனாலேயே, ‘‘அவர்கிட்ட மூணு தடவைக்கு மேல ஒரு விஷயத்தைக் கேட்டா, ‘எடுத்துக்கிட்டு போய்யா’ன்னு தூக்கிப் போட்டுடுவாரு’’ என்று உங்களிடம் பொருளைப் பறிப்பார்கள். இந்த விஷயம் பூமி, மனை, வீடு என்று பல்வேறு இடங்களில் வெளிப்படும். உங்களின் பல பிரச்னைகள் தீர மிக சூட்சுமமான வழியொன்று உள்ளது. அதாவது பிதுர்காரகன் எனப்படும் சனி பகவான் உங்களுக்கு எதிரியாக வருவதால், முன்னோர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சில விஷயங்களை அனுபவிக்க வேண்டி வரும். அல்லது முன்னோர்களுக்கு உங்கள் தந்தையாரோ அல்லது திதி கொடுக்கும் நிலையில் உள்ளவர்களோ திதி கொடுக்காமல் இருப்பதால், அவர்களின் கோபம் கூட உங்கள் வாழ்வை முடக்கலாம். எனவே பிதுர்க் கடன்களை சரியாகச் செய்து விடுங்கள்.

‘ஆழம் பார்த்துக் காலை விடவேண்டும்’ என்பதுபோல நீங்கள் கோபமாகப் பேசும்போது எதிராளியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ‘‘எங்கிட்டதானே அவன் வேலை செய்யறான். இதைவிட வேறெங்க அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்துடப் போறாங்க’’ என்று தூக்கியெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. எதிரி ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக சனி இருப்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. தரக்குறைவாகப் பேசி அதுவே பெரிய பிரச்னையைக் கொண்டுவந்து விடும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். அதிலும் உங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர்கள் வழியாக வரும் எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.

வைரம் வாங்கும்போதும் அதை விற்கும்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் ரத்தினங்கள் பதித்த நகைகளை வாங்கும்போது எச்சரிக்கை தேவை. நகையை அடகு வைத்தல் உங்கள் தொழில் ரீதியான ரொடேஷனுக்கு நல்லது. ஆனால், காசோலை கொடுக்கக் கூடாது. ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாக ஆறாம் இடம் வருகிறது. விடாமல் துரத்துதல் என்பதைவிட, எதையுமே கொஞ்சம் விட்டுப் பிடித்தால் நீங்கள் வெற்றி பெற முடியும். சந்திரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டுக்கு உரியவராக வருவதால் தீவிர சிந்தனை இருக்கும். ஒரே விஷயத்தை நோண்டித் துருவிக் கொண்டிருப்பீர்கள். எல்லோரையுமே உங்களுக்கு எதிரானவர்களாகவும், உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பது போலவும் நினைக்கும் மனப்பிரமை உங்களுக்கு அதிகம் உண்டு. அதை விலக்கிக் கொள்ளப் பாருங்கள். சொந்த ஜாதகத்தில் சனியோடு சூரியனோ, செவ்வாயோ சேராமல் இருந்தால் பிரச்னைகளை எளிதாக முடிக்கலாம்.

சிம்ம ராசியினர் மேற்கண்ட பிரச்னைகள் தீர வழிபட வேண்டிய தலமே திருலோக்கி ஆகும். இங்கு அருளும் க்ஷீராப்தி சயனப் பெருமாளை தரிசியுங்கள். ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்க, திருமுகத்தருகே ஸ்ரீதேவியும், திருவடிப் பகுதியில் பூதேவியும், நாபிக் கமலத்தில் பிரம்மாவும் இருக்கின்றனர். திருமகளை தனது திருமார்பில் ஏற்றுக்கொண்ட தலமாதலால் இத்தல இறைவனை தரிசிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஒற்றுமைக் குறைவால் பிரிந்த தம்பதிகள் இத்தல ஷீராப்தி பெருமாளை தரிசிக்க நிச்சயம் ஒன்று சேர்வர். அதுமட்டுமில்லாது திருமகளே இங்கு நித்திய வாசம் புரிவதால், இங்கு வந்து செல்பவர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். கடன் தீர்ந்து வசதி பெருகும். ஷீரநாயகி எனும் திருநாமத்தோடு தனிக் கோயிலில் மிகப்பொலிவோடு பிரகாசிக்கிறாள் திருமகள். கும்பகோணத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு. அல்லது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோயில், கஞ்சனூர் வழியாக தனி வாகனம் வைத்துக் கொண்டும் செல்லலாம்.

மகம், பூரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

‘வாழ்க்கை என்பது என்ன... கடவுள் இருக்கிறாரா இல்லையா...’ போன்ற கேள்விகளை உருவாக்கி, தேடலைத் துவக்கும் ஞானகாரகனான கேதுதான் மகம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சிம்ம ராசிக் கூட்டினில் இருப்பதால் சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் கேதுவும் வலிமையோடு இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார்கள். இதனால் சூட்சுமமான புத்தியோடு சேர்ந்த ஆளுமையும் இருக்கும். எதையுமே தைரியமாக அணுகுவார்கள்.    

மகம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் அதிபதி செவ்வாய். இவரோடு ராசியாதிபதி சூரியனும், நட்சத்திரத் தலைவராக கேதுவும் ஆள்கிறார்கள். இப்படி இரண்டு ராஜகிரகங்கள் ஒன்றாக இருப்பதால், கல்வியில் நல்ல அடித்தளம் அமையும். மிகச் சிறந்த பள்ளியில் படிக்க முடியும். 6 வயது வரை கேது தசை நடைபெறும். அப்போது மட்டும் கொஞ்சம் உடம்பு படுத்தியெடுக்கும். 7 வயதிலிருந்து 26 வரை சுக்கிர தசை நடைபெறும். தோற்றப் பொலிவு அப்படியே மாறி விடும். படிப்பில் கவனம் இருந்தாலும், கலைகளுக்கும் இடம் தருவார்கள். இந்த நல்ல மாற்றங்கள் 13 வயதுக்குப் பிறகுதான் வரும். அதுவரையிலும் கூச்சமும் தடுமாற்றமும் இருக்கும். பள்ளியில் எந்தப் போட்டி நடந்தாலும் பங்கேற்பார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. விலங்கியல், தத்துவம், வரலாற்றுத்துறை ஆழமாக ஈர்க்கும். பி.காம். படிப்பதை விட இவர்கள் பி.பி.ஏ. படிப்பது நல்லது. மருத்துவத்தில் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ என்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிறந்த நிபுணராக வருவர். தாய்மொழியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக ரிஷப சுக்கிரன் வருகிறார். பொதுவாகவே கேது சொந்த ஜாதகத்தில் நன்றாக இல்லாத பட்சத்தில், பிறக்கும்போது வரும் கேது தசை ஏதேனும் சிறுசிறு தொந்தரவுகள் கொடுக்கும். 4 வயது வரை இப்படித்தான் இருக்கும். 5லிருந்து 24 வயது வரை சுக்கிர தசை நடைபெறும். முதல் பாதத்தை விட பெரிய அளவிலான நன்மைகளை சுக்கிரன் செய்வார். பாட்டு, நடனம், இசை என ஏதேனும் ஒரு கலையைக் கற்றுக் கொள்வார்கள். 25லிருந்து 30 வயது வரை சூரிய தசை வரும். அதற்கு முன்னதாகவே கல்வியில் பெரும் பகுதியை முடித்துவிடுவது நல்லது. கல்லூரியில் தாவரவியல், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் சேரலாம். பி.காம். படிக்கலாம். ஏரோநாட்டிகல்தான் லட்சியம் என்று சிலர் படிப்பார்கள்.


மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால் சூட்சும புத்தி நிரம்பியிருக்கும். அண்டமே சிதறினாலும் அசராத மனநிலை கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு வருடங்கள் கேது தசை வழக்கம்போல் உடல் உபாதையைக் கொடுக்கும். 3 வயதிலிருந்து 22 வரை சுக்கிர தசை நடைபெறும்போது அறிவுக்கூர்மை கூடும். பிளஸ் 2 படிக்கும்போது பள்ளியில் முதல் மதிப்பெண்ணுக்கு முயற்சிப்பார்கள். வாழ்க்கை பற்றிய தேடல் கிட்டத்தட்ட 15 வயதில் தொடங்கும். எழுத்தாளர்கள், பத்திரிகை ஆர்வம் என்று இறங்குவார்கள். படிப்பில் படு சுட்டியாக இருந்து, விருப்பப்பட்ட கல்லூரியில் படிப்பார்கள். 23 வயதிலிருந்து 28 வரை சூரிய தசை வரும்போது தர்க்கம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார்கள். இந்த பாதத்தில் பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு ஏதேனும் படிப்பார்கள். இயற்பியல், தாவரவியல் படிப்பில் தனி கவனம் செலுத்துவார்கள். புதன் ஆள்வதால் டிசைனிங், ஆர்க்கிடெக்ட் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

நான்காம் பாதத்தின் அதிபதி சந்திரன். இவர்களுக்கு மொழியறிவு அதிகம் இருக்கும். பிறக்கும்போதே கேது தசை சில மாதங்கள் இருக்கலாம். 2 வயதிலிருந்து 20 வரை சுக்கிர தசை நடைபெறும்போது, எத்தனை வசதி இருந்தாலும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல வாடுவார்கள். என்னதான் சுக்கிர தசை நடந்தாலும், பள்ளி வாழ்க்கை எப்போது முடியும் என்று அலுப்பு வரும். சிலர் குடும்பச் சூழ்நிலை காரணமாக விடுதியில் தங்கி படிப்பார்கள். 21 வயதிலிருந்து 26 வரை நடக்கும் சூரிய தசை வாழ்க்கையை சட்டென்று மேலேற்றும். சுக்கிர தசையை விட இந்த சூரிய தசைதான் நன்றாக இருக்கும். பொறியியலில் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எதிர்காலம் உண்டு. சி.ஏ. படிப்பை எளிதாகத் தாண்டுவார்கள். மருத்துவத்தில் இ.என்.டி, ரேடியாலஜி, அனஸ்தீஸியா போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக கேது இருப்பதால், ஞானியர்களையும் மகான்களையும் வணங்குவது நலம். ஜீவ சமாதிகள் இருக்கும் பழமையான தலங்களை தரிசிக்கும்போது கல்வியில் முன்னேற்றம் காணலாம். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இங்குள்ள சிவாலயத்துக்கு பின்புறத்தில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவ சமாதி அடைந்தார். கரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது நெரூர்.

பூரத்தில் பிறந்தவர்கள் இனிமையாகப் பேசுவார்கள். எல்லோரையும் வசீகரிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். நட்சத்திர அதிபதியாக சுக்கிரன் வருவதால், பெற்றோரின் ஆசைப்படி கல்வி கிடைக்கும். படிக்கிறார்களோ இல்லையோ, நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். கல்வியைக் கூட கலையாகத்தான் பார்ப்பார்கள். ‘படிப்பைத் தாண்டி சாதிக்க நிறைய இருக்கு’ என்பதை பள்ளியிறுதிக்குள்ளாகவே புரிந்து கொள்வார்கள். அதேசமயம் படிப்பிலும் குறை வைக்க மாட்டார்கள். பொதுவாகவே இவர்களுக்கு சுக்கிர தசை முதலிலேயே வந்து விடுவதால், கல்வியில் தடையோ பிரச்னைகளோ எதுவும் வராது.

பூரம் நட்சத்திரத்தின் அதிபதியாக சூரியனே வருகிறார். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் இரட்டை சூரிய சக்தியை தன்னிடத்தே கொண்டவர்கள். 19 வயது வரை சுக்கிர தசை நடக்கும். சிறிய வயதில் துடுக்குச் சுக்கிரனாக இவர்களிடத்தில் சுக்கிரன் செயல்படுவார். ஆசிரியர்களை கேலி செய்து மாட்டிக் கொள்வதும் உண்டு. ஒருவித பிரமிப்பை தன்னைச் சுற்றிலும் உருவாக்கியபடி இருப்பார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களோடுதான் நட்பு வைத்திருப்பார்கள். மரியாதைக்குரிய மதிப்பெண் எடுப்பார்கள். 19 வயதுக்குள் காதல் அரும்பி, உதிரும். இதனால் படிப்பில் தடை ஏற்படும். முக்கியமாக பிளஸ் ஒன், பிளஸ் 2 படிக்கும்போது எச்சரிக்கை வேண்டும். பெரும்பாலானவர்கள் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டு, பிளஸ் 2வில் பாஸ் ஆனாலே போதும் என்று இருப்பார்கள். 20 வயதிலிருந்து 25 வரை ராசிநாதனான சூரிய தசையே நடைபெறும். சிலர் ராணுவத்தில் சேர ஆசைப்படுவார்கள். கல்லூரியில் அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.  மருத்துவத் துறையில் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர். துறை  ஏற்றது. பொறியியல் எனில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.

இரண்டாம் பாதத்தை அதன் அதிபதியான புதனும், சூரியனும், சுக்கிரனும் சேர்ந்தே ஆள்வர். 14 வயது வரை சுக்கிர தசை இருப்பதால், புதன் அந்த வயதிலேயே நுணுக்கமாக யோசிக்க வைப்பார். அறிவுபூர்வமான வழியில் செலுத்துவார். இன்டோர் கேம்ஸில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். 15 வயதிலிருந்து 20 வரை சூரிய தசையில், சுக்கிர தசை கொடுத்த அலட்சியப்போக்கு கொஞ்சம் மாறும். கல்லூரிகளில் கௌரவம் பெறுவார்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஆர்வம் செலுத்துவார்கள். 21 வயதிலிருந்து 30 வரை சந்திர தசை நடைபெறும். ஜாதகத்தில் சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ, சேர்க்கை பெற்றிருந்தாலோ விபரீத ராஜயோகம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான எல்லா வழிகளும் திறக்கும். பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல கட்டிடத் திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் இயல்பாகவே நன்றாக வரும்.  மருத்துவத்தில் வயிறு, நரம்பு, கண் போன்ற பிரிவுகளில் நிபுணத்துவம் பெறலாம்.
மூன்றாம் பாதத்தை துலாச் சுக்கிரன் ஆட்சி செய்கிறார். கிட்டத்தட்ட 8 வருடம் சுக்கிர தசை நடைபெறும்போது தந்தையார் மிகப்பெரிய பதவிகளில் அமர்வார். 9 வயதிலிருந்து 14 வரை நடைபெறும் சூரிய தசையில் அடிக்கடி தலைவலி வரும். ஓரளவிற்கே மதிப்பெண்கள் எடுப்பார்கள். 15 வயதிலிருந்து 24 வரை சந்திர தசை நடக்கும்போது கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் நுணுக்கமான படிப்பில் ஆர்வம் இருக்காது. மருத்துவத்தில் சரும நோய், உடல் பொலிவுக்கான படிப்புகள் ஏற்றவை. ஃபேஷன் டெக்னாலஜியை மறக்க வேண்டாம். விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசை சார்ந்த கல்வியும் பயனுள்ளதே!


நான்காம் பாத அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருவதால், முதல் நான்கு வருட சுக்கிர தசை சுகவீனங்களை தரும். 5 வயதிலிருந்து 10 வரையிலான சூரிய தசையில் புத்திக் கூர்மை அதிகரிக்கும். கலெக்டர் கையால் பரிசு வாங்குவதெல்லாம் இப்போதுதான். 11 வயதிலிருந்து 20 வரையிலும் சந்திர தசை நடைபெறும்போது சுமாராகத்தான் படிப்பார்கள். பள்ளித் தேர்வுகளில் நிறைய மதிப்பெண் எடுத்து விட்டு, அரசாங்கத் தேர்வுகளில் கோட்டை விடுவார்கள். சந்திரன் சொந்த ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிடில், இக்கட்டான தருணங்களில் மறதியைத் தருவார். பெற்றோர் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். 21 வயதிலிருந்து 27 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கல்வியில் உச்சம் தொடுவார்கள். இவர்கள் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு நிச்சயம் முயற்சிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகளில் சாதிப்பார்கள். நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவிக்கு கொண்டு போகும்.

பூரத்தில் பிறந்தவர்களுக்கு பாடத்தில் முதன்மை தருபவர், பரிமுகக் கடவுள் எனும் திருவந்திபுரம் ஹயக்ரீவர். ஸ்ரீமந்நாராயணன் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளி, ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைஷ்ணவத் திருத்தலங்களில் இது குறிப்பிடத்தகுந்தது. வேதாந்த தேசிகன் எனும் ஞானி இத்தல ஹயக்ரீவரை பூஜித்ததாக வரலாறு கூறுகின்றது. தமிழகத்திலேயே ஹயக்ரீவருக்கு முதன்முதலில் கோயில் அமையப் பெற்றது இங்குதான். இங்கு சிறு மலை மேல் பரிமுகப் பெருமாள் லட்சுமி தேவியுடன் லட்சுமி ஹயக்ரீவராகத் திருக்காட்சி அளிக்கின்றார். கடலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கேட்டை, மூலத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே அணு அணுவாகத் திட்டமிடுவார்கள். புத்திக்குரிய கிரகமான புதனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் இது. இவர்களின் ராசியாதிபதி, செயல்படுத்தும் கிரகமான செவ்வாய் என்பதால், தந்திரத்தோடு செயலாற்றுவார்கள். எந்த ஆசிரியர், எப்படி எழுதினால் மதிப்பெண் போடுவார் என்பதை பள்ளி வயதிலேயே தெரிந்து வைத்திருப்பார்கள். கௌரவமான மதிப்பெண்களை பெற்றுத் தப்பித்துக் கொள்வார்கள்.

கேட்டையின் முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதி பதியாக செவ்வாயும், நட்சத்திர அதிபதியாக புதனும், முதல் பாதத்தை ஆட்சி செய்பவராக குருவும் வருகிறார்கள். இந்த மூவரும்தான் வாழ்வினை நடத்திச் செல்வார்கள். 14 வயது வரை புதன் தசை நடக்கும். புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால், இந்த தசையில் அவ்வப்போது நரம்புக் கோளாறு வந்து நீங்கும். கணக்கு எப்போதும் இவர்களுக்கு ஆமணக்குதான். கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை கணக்குப் பாடத்தில் திணறுவார்கள். சொந்த ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால், கணக்கில் புலியாக வலம் வருவார்கள். இவர்களில் சிலர் தாய்மாமன் வளர்ப்பில் சில காலம் இருப்பார்கள். 15 வயதிலிருந்து 21 வரை கேது தசை நடைபெறும். முக்கிய காலகட்டமான பிளஸ் 2 வரையும், அதற்குப் பிறகு கல்லூரி முடிய இந்த தசை நடப்பதால் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டி வரும். ஆசைப்பட்டதை படிக்க முடியாமல் கிடைத்ததைப் படித்து கேது தசை முடியும்போது மிகச் சிறந்த நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்து விடுவார்கள். 22 வயதிலிருந்து 41 வரை சுக்கிர தசை நடைபெறும்போது பட்டியலிட்டு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஐ.டி. துறை இவர்களுக்கு மிகுந்த சிறப்பு தரும். மேலும் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால் பகுதிநேரமாக பிரெஞ்சு, இத்தாலி என பயின்றால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் இ.என்.டி., மனநல மருத்துவர், வயிறு, நரம்பு தொடர்பான துறைகளில் கவனம் செலுத்தினால் நிபுணராகலாம். 

இரண்டாம் பாதத்தின் அதிபதி மகரச் சனி. புதனும், சனியும் சேர்ந்து அமர்க்களமாக ஆள்வார்கள். பத்து வயது வரை புதன் தசை நடைபெறும். ஒவ்வாமை, வீசிங் போன்ற தொந்தரவுகள் இருக்கும். 11 வயதிலிருந்து 17 வரை நடைபெறும் கேது தசையில், எதிலுயும் ஒரு தடை இருக்கும். பள்ளி மாற்றி படிக்க வைப்பார்கள். இதனால் கொஞ்சம் படிப்பில் மந்தம் ஏற்படும். சனிக்கு கேது கொஞ்சம் பகையாக இருப்பதால், கவனச் சிதறல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில்தான் பலருக்கு தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். பள்ளியிறுதி வரை ஏனோதானோ என்றிருந்தாலும், கல்லூரி சென்றதும் கலக்க ஆரம்பிப்பார்கள். 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது வாழ்க்கை ரம்மியமாக இருக்கும். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறைகளில் சாதிக்கலாம். இவர்கள் பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் என்று படிக்கும்போது அதில் தனித்துவமிக்க நபராக விளங்குவார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே பைலட் ஆவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். சீக்கிரமே வரும் சுக்கிர தசையில், இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும். சிலர் டி.எஃப்.டி. படித்து திரைத் துறையில் நுழைவார்கள்.


மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். இவர்கள் கொஞ்சம் சாத்வீகமாகத்தான் இருப்பார்கள். ஏறக் குறைய 7 வயது வரை புதன் தசை நடைபெறும். 8 வயதிலிருந்து 14 வரை கேது தசை நடைபெறும்போது யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். பத்தாம் வகுப்பில் கொஞ்சம் பொறுப்புணர்வு வந்து படிக்கத் தொடங்குவார்கள். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். தோற்றப் பொலிவு கூடும். பத்தாம் வகுப்பில் சுமாராகப் படித்தாலும் அடுத்தடுத்த வகுப்புகளில் மிக நன்றாகப் படிப்பார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு கிட்டத்தட்ட மத்திம வயதிற்குள்ளேயே சுக்கிர தசை வருவதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நிறைய பணம், நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெக்கரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறலாம். இவர்கள் மருத்துவத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் என்றும் படிக்கலாம்.

நான்காம் பாதத்தை மீன குருவோடு, புதனும், செவ்வாயும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையில் பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில், இவர்களை விளையாட்டுப் பக்கமும் கொஞ்சம் விட்டால் பின்னால் தேசிய அளவில் சாதனை புரிவார்கள். சிறிய வயதிலேயே, அதாவது 11 வயதிலிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வரை இருப்பதால் கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த சுக்கிர தசை பெற்றோருக்கு அதிக பணவரவைத் தரும். 25, 27, 29 வயதில் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள். இவர்கள் கல்லூரியில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதில் பிஎச்.டி. செய்து பேராசிரியராகும் வாய்ப்புகள் உண்டு. பி.இ. சீட் கிடைத்தால் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் என்று சேரலாம். மருத்துவத் துறையில் முக சீரமைப்பு, வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் ஜெயிப்பார்கள். இந்தப் பாதத்தில் பிறந்த பலர் ஆசிரியப் பணியில் அமர்வார்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் காஞ்சிபுரம் அருகேயுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழி எனும் தலத்தில் அருள்பாலிக்கும் விஜயராகவரை வணங்குவது நலம். இவர்களுக்கு வாக்கின் அதிபதியாகவும், கல்விக்குரியவராகவும் கோதண்ட குரு வருவதால், வெற்றி பெற்ற கோலத்தில் அருளும் விஜயராகவரை தரிசிப்பது நன்மை தரும். இத்தலம் காஞ்சிபுரம்  வேலூர் பாதையில் அமைந்துள்ளது.


தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் கேதுவின் ஆதிக்கம் இருக்கும். பள்ளிப் பருவத்திலேயே சூட்சுமமான விஷயங்களை அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். மதிப்பெண்களுக்காக படிக்காமல் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காகவே நிறைய படிப்பார்கள். முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும், ராசியாதிபதியாக குருவும், நட்சத்திர தலைவராக கேதுவும் இருக்கிறார்கள். இரு ராஜ கிரகங்கள் ஒன்றாக இருப்பதால், வகுப்பறையில் புத்திசாலி மாணவனோடு மட்டுமே பழகுவார்கள். 6 வயது வரை கேது தசை நடைபெறும். கொஞ்சம் உடம்பு படுத்தி எடுக்கும். அதன்பின் 26 வயது வரை சுக்கிர தசை நடைபெறும். கலைகளுக்கு நாயகன் சுக்கிரன் என்பதால் ஆடல், பாடல், இசை என்று ஏதேனும் ஒன்றில் தனித்திறமை பெறுவார்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. மண் சம்பந்தப்பட்ட படிப்பும், அறிவியலில் விலங்கியல் துறையும் இவர்களுக்கு ஏற்றது. பி.காம். படிப்பதை விட பி.பி.ஏ. படிப்பது நல்லது. எம்.பி.ஏ.வில் பைனான்ஸ், ஹெச்.ஆர். என்று போவது நல்லது. மருத்துவத்தில் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ, மனநலம் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிரகங்களின் அலைவரிசை எளிதாக வெற்றி பெறச் செய்யும்.

இரண்டாம் பாதத்தின் அதிபதி சுக்கிரன். பொதுவாகவே கேது சொந்த ஜாதகத்தில் நன்றாக இருந்தால், பிறக்கும்போது நடைபெறும் கேது தசையில் எந்த பிரச்னையும் இருக்காது. 4 வயது வரை ஜாதகத்தில் கேதுவின் நிலைப்படி உடல்நிலை அமையும். ஆனால் பொதுவாக ஒவ்வாமை வந்து நீங்கும். 5 வயதிலிருந்து 24 வரை சுக்கிர தசை நடைபெறும். முதல் பாதத்திற்கு சொல்லும்படியான பெரிய நன்மைகள் செய்யாத சுக்கிரன், இங்கே வாரி வழங்குவார். சிறுவயதிலே நல்ல பள்ளி, வீட்டுச் சூழல் என்று ரம்மியமாக வாழ்க்கை நகரும். பொதுவாகவே சுக்கிர தசை எல்லோரையும் கவரும் கலைகளைத்தான் அதிகம் கொடுக்கும். ஆனாலும், கல்லூரி வரை மரியாதையான மதிப்பெண்களை எடுத்து விடுவார்கள். தாவரவியல், பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் நன்று. பி.காம். படிக்கலாம். எகனாமிக்ஸ் சரி வராது. ஏரோநாட்டிகல் கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மருத்துவத்தில் பிளாஸ்டிக் சர்ஜனாக வரும் வாய்ப்பு அதிகம்.

மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால் சூட்சும புத்தி அதிகமிருக்கும். 2 வருடங்கள் கேது தசையில் உடல் உபாதைகள் படுத்தும். ஆனால், பயப்பட வேண்டாம். 3 வயதிலிருந்து 22 வரை சுக்கிர தசை நடைபெறும்போது புத்தியில் பிரகாசம் கூடும். வாழ்க்கை பற்றிய தேடல் 15 வயதிலேயே தொடங்கும். பொதுவாகவே மூல நட்சத்திரக்காரர்களுக்கு கல்லூரி வரை படிப்பில் எந்த பிரச்னையும் இருக்காது. ராசிக்குரிய அதிபதியாக குரு வருவதால் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ், இயற்பியல், தத்துவம், சமயம் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. வானவியல் தொடர்பான பட்டமும் வெற்றி தரும். வரலாறு இவர்களுக்கு இனிக்கும். இந்த பாதத்தில் பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படிப்பார்கள். புள்ளியியல், ஏ.சி.எஸ். போன்ற படிப்புகளில் ஈடுபாடு காட்டினால் நிச்சயம் வெற்றி உறுதி. பொறியியலில் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் நல்லது. மருத்துவத்தில் மூளை, சிறுநீரகம் சார்ந்த துறைகள் எனில் நிபுணராகும் வாய்ப்பு உண்டு.

நான்காம் பாதத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். பிறக்கும்போதே கேது தசை சில மாதங்கள் இருக்கலாம். அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் வரை நடக்கலாம். பிறகு 20 வயது வரை சுக்கிர தசை நடைபெறும்போது செல்வ வளத்தோடு சுகபோகமாக வாழ்வார்கள். கவிதைகளை எழுதிக் குவித்து இலக்கிய ஈடுபாடு காட்டுவார்கள். அறிவியலில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். இவர்களில் நிறைய பேர் சயின்டிஸ்ட் ஆவார்கள். முக்கியமாக அஸ்ட்ரானமி போன்ற படிப்பெனில் சாதனையாளராகத்தான் வலம் வருவார்கள். 21 வயதிலிருந்து 26 வரையிலும் நடக்கும் சூரிய தசை வாழ்க்கையை சட்டென்று மேலேற்றும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொறியியலில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எளிதாக ஜெயிக்கலாம். சி.ஏ. நல்ல எதிர்காலம் தரும். மருத்துவத்துறை எனில் இ.என்.டி, மயக்கவியல் போன்ற துறைகளில் வல்லவர் ஆகலாம்.

மூல நட்சத்திரக்காரர்களின் வாக்குக்கு  அதாவது கல்விக்கு  அதிபதியாக மகரச் சனி வருவதால் பள்ளிகொண்ட கோலத்தில் அருளும் ஈசனை வணங்குவது நன்மை பயக்கும். சாதாரணமாக பெருமாளைத்தான் பள்ளிகொண்ட கோலத்தில் தரிசித்திருப்போம். ஆனால், ஆலகால விஷத்தை உண்டு சற்றே மயங்கிக் கிடக்கும் ஈசனை சுருட்டப்பள்ளி கோயிலில் தரிசிக்கலாம். சென்னையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. 

உத்திரட்டாதி, ரேவதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், வாழ்க்கையின் இருவேறு துருவங்களையும் பால்யத்திலேயே பார்த்து விடுவதால் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தை குருவும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. வாக்கு வன்மை உள்ளவர்களாக இவர்கள் விளங்குவார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆட்சி செய்கிறார். கறாராகப் பேசும் இவர்களை, நீக்கு போக்கு தெரியாதவர்கள் என சிறிய வயதிலேயே சொல்வார்கள். பிறந்தவுடனே நடைபெறும் சனி தசை சவாலாகவே இருக்கும். அதன்பிறகும் 17 வயது வரை சவாலாகத்தான் இருக்கும். வேலை மாற்றத்தால் தந்தையை அலைய வைக்கும். இதனால் பள்ளி மாறிப் படிக்க நேரும். படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறுவார்கள். அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

18 வயதிலிருந்து வாழ்க்கை அப்படியே மாறும். 34 வயது வரை புதன் தசை நடைபெறும். சனி தசையின் கஷ்டங்கள் இதில் இருக்காது. யாரும் அவ்வளவு எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து ஜெயிப்பார்கள். ஆங்கில இலக்கியம், பொலிடிகல் சயின்ஸ், வரலாறு, சட்டம் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியராகும் வாய்ப்புண்டு. எம்.பி.ஏவில் ஹெச்.ஆர், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், நரம்பு ஆகிய துறைகள் ஏற்றம் தரும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை புதன் ஆள்கிறார். கல்வி இவர்களுக்கு இளமையிலேயே வருமானம் தரும். பள்ளிக் காலத்திலேயே டியூஷன் எடுத்து சம்பாதிப்பவரும் உண்டு. 13 வயது வரை சனி தசை இருக்கும். 

சிறிய வயதிலிருந்தே உறவினர்கள், குடும்பத்தினரிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். விஷய ஞானம் உள்ளவர்கள்தான் தன்னுடன் பழக முடியும் என்பதாக மற்றவர்களை நினைக்க வைப்பார்கள். ஆசிரியர் போர்டில் கணக்கை எழுதும்போதே விடையை நோட்டில் போட்டு விடுவார்கள். 14 வயதிலிருந்து 30 வரை புதன் தசை நடக்கும்போது படிப்பில் கவனம் தேவை. சிலருக்கு போதைப் பழக்கம், கூடா நட்பு என்று வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதல் பாதம் அளவுக்குக் கஷ்டங்கள் இருக்காது. ஏனெனில் சனியும், புதனும் இணைந்து செயல்படும்போது ஒருவிதமான அனுசரிப்பு இருக்கும். இவர்களில் பலர் ஆடிட்டிங், அக்கவுன்ட்ஸ் துறைகளில் பிரகாசமடைகிறார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல், எக்கனாமிக்ஸ் படிப்பிலும் நிபுணத்துவம் பெறலாம். மரைன் எஞ்சினியரிங், கேட்டரிங் டெக்னாலஜி படிப்பிற்கும் முயற்சிக்கலாம்.  

மூன்றாம் பாதத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். கிட்டத்தட்ட 8 வயது வரை சனி தசை நடைபெறும். 3 வயது முதல் 5 வரை வீசிங், ஈஸ்னோபீலியா போன்ற தொந்தரவுகள் வந்து நீங்கும். விரும்பும் கோர்ஸிலேயே இவர்களைப் படிக்க வைப்பது நல்லது. 9 வயதிலிருந்து 25 வரை புதன் தசை நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமிருந்தாலும், அலட்சியமும் கூடவே இருக்கும். சுக்கிரன் பாதத்திற்கு அதிபதியாக வருவதால் பெரிய இழப்புகளோ ஏமாற்றங்களோ இருக்காது. சம்பாதிக்க ஒன்று, ஆர்வத்திற்கென்று ஒன்று எனப் பிரித்து வைத்துப் படிப்பார்கள். இதை பள்ளியிறுதியிலேயே தெளிவாக முடிவெடுத்து விடுவார்கள். பி.இ. படித்து விட்டு அப்படியே கலைத்துறைக்கு தாவுவார்கள். ‘என்னால் அதுவும் முடியும், இதுவும் முடியும்’ என்பார்கள். 
ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. தாவரவியல், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்லது. நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவார்கள். சிறுவயதிலிருந்தே யாரையும் சார்ந்திருப்பது பிடிக்காது. படிப்பைவிட விளையாட்டிற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். பதக்கங்களும் வெல்வார்கள். 4 வயது வரை சனி தசை நடைபெறும். 5 வயதிலிருந்து 21 வரை புதன் தசை நடைபெறுகிறபோது வம்பு தும்பெல்லாம் தேடிவரும். இதனால் படிப்பில் கவனம் செல்லாது. நட்பு வட்டத்தை கவனிக்க வேண்டும். கொஞ்சம் எமோஷனலாக இருப்பார்கள். கல்லூரியில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்வார்கள். 

22 வயதிலிருந்து 28 வரை நடைபெறும் கேது தசையின்போதுதான் கொஞ்சம் விழிப்படைவார்கள். பள்ளியில் சாதாரணமாகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப்புகள் சாதகமாக இருக்கும். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், ஐ.டி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள். இவர்களில் பலர் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள். பைலட்டாக விரும்பினால், அதற்கான முயற்சியும் செய்யலாம். குருவும் சனியும் சேர்ந்திருப்பதால் நல்லது கெட்டதுகளில் உழன்று உழன்று புடமிட்ட தங்கமாக வாழ்க்கை மாறியிருக்கும். குருவோடு சனி சேர்ந்திருப்பதால் தேடித் திரிந்து ஆராய்ந்து அறிவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

மேலும், கல்வியைத் தரும் வாக்கிற்கு உரியவராக செவ்வாய் வருகிறார். எனவே முருகனை வழிபடுவது சிறப்பான பலன் தரும். அதிலும் திருவிடைக்கழி முருகனை வழிபட்டால் நிச்சயம் கல்விச் செல்வத்தை நிறைந்து அளிப்பார். சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களிலேயே விளையாட்டுத்தனம் மிகுந்த நட்சத்திரம் ரேவதி. திட்டமிடும் கிரகமான புதனே ரேவதியை ஆட்சி செய்கிறது. முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதிபதியாக மீன குருவும், நட்சத்திர அதிபதியாக புதனும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை புதன் தசை நடக்கும். 

புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால், இந்த தசை நடக்கும்போது குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை என்று எழுதுவார்கள். குழந்தையின் மழலைத்தனம் 14 வயது வரை இருக்கும். 15 வயதிலிருந்து 21 வரை கேது தசை நடைபெறும். இந்த வயதில் ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்க்கலாம். படிக்கவில்லையெனில் கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும். நான்கு பேருக்கு முன் அவமானப்படுத்தக் கூடாது. ஐ.டி. துறை இவர்களுக்கு சிறப்பைத் தரும். சட்டம், பொலிடிகல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால் வேலைக்கு சென்று கொண்டே பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஆங்கில இலக்கியம் போன்றவற்றை பயின்றால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவத்தில் இ.என்.டி., மனநல மருத்துவர், வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட துறைகளில் கவனம் செலுத்தினால் நிபுணராகலாம். 

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பத்து வயது வரை புதன் தசை நடைபெறும். 11 வயதிலிருந்து 17 வரை நடைபெறும் கேது தசையில் எதிலேயும் ஒரு தடங்கல் இருக்கும். படிப்பதில் நாட்டமில்லாது கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கும். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் பெரியளவில் கல்வித் தடைகள் வராது. 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது தெளிவான வாழ்க்கை தொடரும். கேட்டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறையில் சாதிப்பார்கள். பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் படித்தாலும் ஜெயிக்கலாம். ஏனெனில், அடுத்து 18 வயதிலிருந்து 37 வரை சுக்கிர தசை நடைபெறும்போது இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும்.

மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். ஆரவாரமில்லாது வேலைகளை முடிப்பார்கள். 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்புடன் கூடிய முதிர்ச்சியும் கலந்திருக்கும். 8 வயதிலிருந்து 14 வரை கேது தசை நடைபெறும்போது படிப்பெல்லாம் சுமார்தான். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். முதல் இரண்டு பாதங்களை விட சுக்கிர தசை கூடுதலாகவே நல்ல பலன்களைத் தரும். கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்துகொண்டு படிப்பார்கள். 

எந்தத் துறையில் பணம் கொட்டுகிறதோ அதைத்தான் படிப்பார்கள். இவர்களில் பலர் வெளிநாடு சென்று படிப்பார்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெகரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறலாம். மருத்துவத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் என்று படிக்கலாம். இவர்கள் அந்தந்த வருடத்தில் எந்த புதிய படிப்பு வந்தாலும் அதில் சேரத்தான் முயற்சிப்பார்கள். நான்காம் பாதத்தை மீன குருவோடு, நட்சத்திர அதிபதியான புதனும், ராசியாதிபதியான மீன குருவும் சேர்ந்து ஆட்சி செய்யும். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையின்போது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 

4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில் படிப்பை விடுத்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். படிப்பிலும் பள்ளியின் முக்கிய மாணவராக இருப்பார்கள். மிகச் சிறிய வயதிலேயே -அதாவது 11 வயதிலிருந்து - சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால், பெற்றோரின் செல்வ நிலை உயரும். கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதில் பிஎச்.டி. வரை முடித்து விட்டு அங்கேயே பேராசிரியராகும் வாய்ப்பு உண்டு. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு இவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் என்றும் சேரலாம். மருத்துவத்தில் முகச் சீரமைப்பு, வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால், இந்தப் பாதத்தில் பிறந்த பெரும்பாலானோர் ஆசிரியர் பணியில் அமர்வார்கள். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் வருகிறார். அதனால் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது. 

மேலும், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களையும் தனுசு குரு, மகரச் சனி, கும்பச் சனி, மீன குரு என்று ஆட்சி செய்கிறார்கள். குருவும், சனியும் சேர்ந்த ஆதிக்கமாக அமைகிறது. எனவே, விஸ்வரூபக் கோலத்தில் அருளும் பெருமாளை வழிபட்டால் மிகவும் நல்லது. அப்படிப்பட்ட தலமே திருக்கோவிலூர் ஆகும். இங்கு எம்பெருமான் உலகளந்த பெருமாளாக காட்சியளிக்கிறார். சிறிய வயதிலிருந்து - அதாவது வாமன வயதிலிருந்தே - இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால், அவனருளால் விஸ்வரூபம் எடுக்கலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்தும் செல்லலாம்.